இந்தியா

ஹத்ராஸ் பெண்ணின் உடலை தகனம் செய்ததில் மனித உரிமை மீறல் : அலகாபாத் உயர்நீதிமன்றம்

webteam

ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை போலீசார் தகனம் செய்ததில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் கால பூர்கி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அவரது உடல் சொந்த கிராமத்தில் நள்ளிரவில் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவங்கள் தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டெல்லி மருத்துவமனையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை இரவோடு இரவாக சுடுகாட்டில் வைத்து போலீசார் தகனம் செய்தது ஏன் என்று போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஹத்ராஸ் பெண்ணின் உடலை தகனம் செய்ததில் மனித உரிமை மீறல் நடந்திருக்கிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து 11 பக்க உத்தரவில் “இந்த சம்பவத்தில் நாங்கள் எந்த நல்ல காரணத்தையும் காணவில்லை. ஏன் சில மணிநேரம் கூட குடும்ப உறுப்பினர்களிடம் உடலை ஒப்படைக்கவில்லை. வீட்டிலேயே தங்கள் சடங்குகள் செய்யக்கூட ஒரு அரைமணிநேரம் ஒதுக்காதது ஏன்? அதன்பின்னர் அடுத்த நாள் காலையில் கூட உடலை தகனம் செய்யலாம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு எவ்வாறு ஈடு செய்ய முடியும். இதற்கு யார் பொறுப்பு? நியாயமான விசாரணைக்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்படக்கூடாது என்பதுபோல பாதிக்கப்பட்டவரின் படுகொலையிலும் யாரும் ஈடுபடக்கூடாது. உடல் தகனம் செய்யப்பட்டதில் முற்றிலும் அடிப்படை மனித உரிமை மீறல்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.