இந்தியா

ஹரியானா தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்? யார்?

ஹரியானா தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்? யார்?

webteam

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் குறித்த சில விவரங்கள்  வெளியாகியுள்ளன.

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் இங்கு தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய வேட்பாளர்கள் யார்? அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளன.  

ஹரியானாவின் முதலமைச்சரான மனோகர் லால் கட்டார் மீண்டும் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜாட் சமூகத்தவர் ஆதிக்கம் நிறைந்த ஹரியானாவின் முதல் பஞ்சாபி முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெற்றார். கடந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஜெய் பிரகாஷ் குப்தாவை 63 ஆயிரத்து 773 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முன்னாள் முதலமைச்சரும் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, ரோஹ்தக் மாவட்டத்தின் காரி சம்ப்லா கிலோலியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் பேரனும், இந்திய தேசிய லோக் தள் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகனுமான அபய் சிங் சவுதாலா‌, எல்லனாபாத் தொகுதியில் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய தேசிய லோக் தள் கட்சியில் இருந்து விலகிய பின், ஜனநாயக ஜனதா என்ற புதிய கட்சியை உருவாக்கி உச்சனா கலன் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கைத்தால் தொகுதியில் இருந்து போட்டியிகிறார். பூபீந்தர் சிங் ஹூடா தலைமையிலான அரசில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்துள்ளார்.

மல்யுத்த சாம்பியனான பபிதா போகாட் அண்மையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார். தாத்ரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாரதிய ஜனதா சார்பில் களமிறங்கிய மற்றொரு மல்யுத்த சாம்பியனான யோகேஸ்வர் தத், கோஹானா மாவட்டத்தில் உள்ள பரோடா தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் பெஹோவா தொகுதியில் போட்டியிடுகிறார்

தொலைக்காட்சி நடிகையும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தவருமான சோனாலி சிங்கை போகாட்டை ஆடம்பூர் தொகுதியில் பாரதிய ஜனதா களமிறக்கியுள்ளது