இந்தியா

2016-ம் ஆண்டில் கூட்டு பாலியல் வன்முறைகளில் ஹரியானா முதலிடம்

2016-ம் ஆண்டில் கூட்டு பாலியல் வன்முறைகளில் ஹரியானா முதலிடம்

webteam

பெண்களுக்கு எதிரான கூட்டுப் பாலியல் வன்முறைகளில் ஹரியானா தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறுகிறது.

ஹரியானா மாநிலம் தொடர்ந்து 3 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்முறைகளில் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் கணக்குப்படி கூட்டு பாலியல் வன்முறைகளில் ஹரியானா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதாவது, ஒரு லட்சம் பெண்களில் 1.5 பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாவதாக என்சிஆர்பி கூறியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மட்டும் 191 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2015 ஆம் ஆண்டில் 204 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2015-ஐ விட 2016-ல் வழக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், ஹரியானா தொடர்ந்து முதலிடத்தில்தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு நடந்த குற்றங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.

ஹரியானாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தானில் ஒரு லட்சம் பெண்களில் 1 பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார். மூன்றாவதாக இந்தியாவின் தலைநகரான டெல்லி உள்ளது. டெல்லியில் ஒரு லட்சம் பெண்களில் 0.9 பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்.

ஹரியான அரசு இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 2016-ல் பெண்களுக்கு எதிரான கொடிய குற்றங்கள் தொடர்பாக 1187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ல் 1070 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2015-ஐ விட 2016-ல் பெண்களுக்கு எதிரான கொடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்று என்சிஆர்பி கூறுகிறது. ஹரியானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒட்டுமொத்தமாக 2016-ல் மட்டும் 9,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் கொலை செய்யப்படுவது 7 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் கடத்தப்படுவது 15 சதவீதம் அதிகரித்துள்ளது என்கிறது என்சிஆர்பி அறிக்கை.