இந்தியா

கொரோனா பரவ வாய்ப்பு: 'சுவிங்கம்'க்கு தடை!

webteam

கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனக்கூறி ஹரியானா அரசு சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 450
பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்தது. 50பேர்
வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொற்று வைரசான கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்
என்றும், சமூக விலகல் வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது எனக்கூறி ஹரியானா அரசு சுவிங்கம்மை ஜூன் 30ம் தேதி வரை தடை செய்துள்ளது.

அதன்படி ஜூன் 30வரை சுவிங்கம்மை விற்கவோ வாங்கி சுவைக்கவோ கூடாது என குறிப்பிட்டுள்ளது. ஆங்காங்கே துப்பப்படும் சுவிங்கம்மால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக ஹரியானா அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் குட்கா, பான்மசாலா போன்றவற்றின் மீது போடப்பட்டுள்ள தடையை உறுதி செய்து விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டுமென்றும் ஹரியானா அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.