பரப்புரையில் சேவாக் pt web
இந்தியா

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்த சேவாக்!

கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Angeshwar G

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வரும் அக்டோபர் 5 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் வரும் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. மொத்தம் 60 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. மொத்தமாக 1031 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். பிரசாரங்கள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இதனிடையே சேவாக் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேவாக், காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அனிருத் சவுத்ரி, முன்னாள் பிசிசிஐ தலைவரான ரன்பீர் மகேந்திராவின் மகனும், ஹரியானாவின் முன்னாள் முதல்வரான பன்சிலாலின் பேரனுமாவார். டோஷம் (Tosham) தொகுதியில் அனிருத் சவுத்ரி போட்டியிடுகிறார். மேலும் பிசிசிஐயின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அதுமட்டுமின்றி, 2011 ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்திய அணியின் மேலாளராகவும் இருந்தவர்.

இந்நிலையில்தான் கிரிக்கெட் வீரர் சேவாக் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார். டோஷம் தொகுதி மக்களை அனிருத் சவுத்ரிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பிரசாரத்தில் பேசிய சேவாக், “அனிருத் சவுத்ரியை எனது மூத்த சகோதரராகவே பார்க்கிறேன். அதுமட்டுமின்றி அவரது தந்தையான ரன்பீர் சிங் மகேந்திரா பிசிசிஐ தலைவராக பணியாற்றியவர். எனக்கு நிறைய உதவியுள்ளார். இது அவருக்கு மிக முக்கியமான நாட்களில் ஒன்று. மேலும் நான் அவருக்கு உதவமுடியும் என நினைக்கின்றேன். டோஷம் தொகுதி மக்கள் அவரை வெற்றி பெற உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அனிருத் சவுத்ரியும் தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “தற்போதைய பாஜக அரசாங்கம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்கத் தவறிவிட்டதால், காங்கிரஸ் 100% வெற்றிபெறும் என உறுதியாக நம்புகிறேன். இங்கு பெரும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அரசாங்கம் அதையும் தீர்க்கத் தவறியுள்ளது. இங்கு வளர்ச்சிகள் ஏதும் நடைபெறவில்லை. இந்த பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பரப்புரை இன்றுடன் ஓய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.