ஒலிம்பிக்கின் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக வினேஷ் போகத் நேற்று இறுதிப்போட்டிக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும் அவருக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்க வேண்டும் என நாடு முழுவதிலும் இருந்து ஆதரவு கூடியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஹரியானாவை சேர்ந்த வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் போலவே நம் மாநிலத்தில் வரவேற்கப்படுவார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், “எங்கள் துணிச்சலான மகள், ஹரியானாவைச் சேர்ந்த வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் அபாரமாக விளையாடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஆனால் சில காரணங்களால், அவரால் இறுதிப்போட்டியில் விளையாட முடியாமல் போனது. இருப்பினும் நம் அனைவருக்கும் அவர் ஒரு சாம்பியன். எனவே வினேஷ் போகத்-க்கு வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கான வரவேற்பை ஹரியானா அரசு வழங்கும். மேலும் அவருக்கான வெகுமதிகளை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.