ஹரியான தேர்தல் களம் முகநூல்
இந்தியா

சாதனைக்களத்தில் சேர்ந்து சாதனை படைத்த டங்கல் குடும்பம்; அரசியல் களத்தில் பிரிந்துகிடக்கிறது! காரணம்?

மல்யுத்த களத்தில் கோலோச்சிய டங்கல் குடும்பம் இன்று ஹரியானா அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கிறது. வினேஷ் போகத் எடுத்த முடிவு சரியானது இல்லை என்கிறார் அவரது பயிற்சியாளரும், பெரியப்பாவுமான மஹாவீர் போகட்.

PT WEB

மல்யுத்த களத்தில் கோலோச்சிய டங்கல் குடும்பம் இன்று ஹரியானா அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கிறது. வினேஷ் போகத் எடுத்த முடிவு சரியானது இல்லை என்கிறார் அவரது பயிற்சியாளரும், பெரியப்பாவுமான மஹாவீர் போகட்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார்கள்... நீதி கேட்ட வீரர் வீராங்கனைகள்... எடைப்பிரச்னையில் பறிபோன ஒலிம்பிக் பதக்கம்.... இப்படி இந்திய மல்யுத்தக் களம் சந்தித்த பிரச்னைகள் ஏராளம்!

இதில் அரசியல் தலையீடுகள் இருக்கிறதோ என சந்தேகம் எழுந்த நிலையில், ஹரியானா மாநிலத்தின் தேர்தல் அறிவிப்பு வந்தது.

ஆச்சர்யமளிக்கும் வகையில் ஒலிம்பிக் பதக்கத்தை 100 கிராம் எடையால் பறிகொடுத்த வினேஷ் போகட்டும், அவரது அக்காவின் கணவரும் ஒலிம்பிக் பதக்க நாயகனுமான பஜ்ரங் புனியாவும் காங்கிரஸில் இணைந்தனர். சேர்ந்த சில நாட்களிலேயே ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வினேஷ்க்கு வாய்ப்பு கிட்டியது. அங்குள்ள ஜுலானா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினேஷ் போகட் பரப்புரையையும் தொடங்கிவிட்டார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வரும் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், வினேஷ் போகட்டின் முடிவு தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்திருக்கிறார் அவரது பயற்சியாளரும், பெரியப்பாவுமான மஹாவீர் போகட்.

இதுகுறித்து எம்மிடம் வினேஷ் போகட் கலந்து ஆலோசிக்கவில்லை. பிள்ளைகள் அவரவர் விருப்பத்தை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பெரியவர்கள் ஆகிவிட்டார்கள். அரசியல் எண்ணத்தை விட்டுவிட்டு அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது குறித்து வினேஷ் சிந்தித்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் தனது மூத்த மகளும், ஒலிம்பிக் வீராங்கனையுமான பபிதா போகட் பாரதிய ஜனதாவில் ஏற்கெனவே இணைந்துள்ளதை சுட்டிக்காட்டினார் அவர். ஏற்கெனவே 2019-ல் பாரதிய ஜனதாவில் இணைந்த பபிதா போகட் அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் தாத்ரி எனும் தொகுதியில் போட்டியிட்டு சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். மூன்றாவது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது.

இந்த நிலையில், ஹரியானா தேர்தல் போரில் பாரதிய ஜனதா மீண்டும் வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். சாதனைக்களத்தில் சேர்ந்து கிடந்த டங்கல் குடும்பம், இன்று அரசியல் களத்தில் பிரிந்து கிடக்கிறது. ஹரியானா தேர்தல் முடிவுகளும் எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.