இந்தியா

‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்

‘எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் பலம் பெற்ற பாஜக கூட்டணி’ - ஹரியானா தேர்தல் களம்

webteam

ஹரியானா மாநிலத்தில் தேர்தலுக்காக கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி குறித்தும் வெற்றி வாய்ப்பு குறித்தும் சில விவரங்கள் தெரிய வந்துள்ளன. 

ஹரியானா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள் என்ற இந்த மூன்று கட்சிகள் மட்டுமே பிரதானமான கட்சிகளாக இருக்கின்றன. இதைத் தவிர சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்வாதி, ஜனநாயக் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளும் அங்கு உள்ளன. 

இதில் பாரதிய ஜனதா கட்சியுடன் சிரோமணி அகாலிதளம் வைத்திருந்த கூட்டணியை அண்மையில் முறித்துக்கொண்டது. சிரோமணி அகாலி தளம் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவான கலன்வாலி தொகுதி எம்எல்ஏ பல்கூர் சிங் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. கூட்டணி மரபை பாஜக மீறி விட்டது எனக்கூறி கூட்டணியிலிருந்து வெளியே வந்த அகாலிதளம் தற்பொழுது ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. 

மக்களைவைத் தேர்தலில் ஹரியானாவின் 10 தொகுதிகளையும் வென்ற பாஜகவின் அசுரப் பலத்தை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் தலைமையில் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் இந்திய தேசிய லோக் தள் கட்சியின் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியதை அடுத்து தொடக்கத்திலேயே அந்தப் பேச்சு மறைந்து போனது. 

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியின் காரணமாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி அமையவில்லை. அடுத்த ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. 

இப்படி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பக்கம் செல்ல காங்கிரஸ் கட்சி ஹரியானா மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மை நடக்க உள்ள ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற சாதகமாக அமைந்துள்ளது என்கிறனர் அரசியல் விமர்சகர்கள்.