இந்தியா

தற்கொலைக்கு முயன்ற தாய் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய 8 வயது மகன் - எப்படி தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

ஹரியாணாவில் தற்கொலைக்கு முயன்ற தனது தாயை அவரது 8 வயது மகன் காப்பாற்றிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஹரியாணா மாநிலம் கய்தால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவீதா தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகும் இவருக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்று இரவும் தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சவீதா, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

இதையடுத்து, இன்று காலை தனது 8 வயது மகன் ராகுலை வீட்டுக்கு வெளியே சென்று விளையாடுமாறு அவர் கூறியிருக்கிறார். அவரும் வெளியே சென்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு பின்புறம் உள்ள ஜன்னல் வழியாக தற்செயலாக பார்த்த போது, தனது தாயார் தூக்கிடுவதற்காக சேலையை மின்விசிறியில் கட்டிக் கொண்டிருப்பதை ராகுல் பார்த்துவிட்டார்.

இதையடுத்து பயத்தில் அவர் கூச்சலிட்டிருக்கிறார். ஆனால், பக்கத்தில் வீடுகள் ஏதும் இல்லாததால் அவரது கூச்சல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இதனைத் தொடந்து, சமயோகிஜதமாக யோசித்த சிறுவன் ராகுல், தனது கையில் இருந்த செல்போனில் அவசர உதவி எண்ணான 112-ஐ அழைத்துள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய போலீஸாரிடம், இந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதன்பேரில், வெறும் 8 நிமிடங்களுக்கு உள்ளாகவே போலீஸார் சிறுவனின் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து சவீதா தேவியை காப்பாற்றினர். பின்னர், அறிவுப்பூர்வமாக செயல்பட்ட சிறுவனுக்கும் போலீஸார் ரூ.3000 ரொக்கத்தை பரிசாக வழங்கினர். ஏதேனும் ஆபத்து என்றால் 112-ஐ அழைக்க வேண்டும் என தனது பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டதாக சிறுவன் ராகுல் தெரிவித்தார்.