பொதுமக்கள் பாதுகாப்பாக ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், பண்டிகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலி திருவிழா நாளை மறுநாள், மார்ச் 8ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டெல்லி போக்குவரத்து சிறப்பு ஆணையர் எஸ்.எஸ்.யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஹோலி பண்டிகை நாளில் தேவையான அளவு காலவர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஹோலியை பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று டெல்லி காவல்துறை தரப்பில் இருந்து கேட்டுக்கொள்கிறோம். கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி செல்லுதல், 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனங்களில் பயணித்தல், 18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும் மொபைல் வழிப்பறி, அனுமதியின்றி மதுபானங்கள் கொண்டு செல்லுதல் போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று கூறிய அவர், குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.