இந்தியா

‘முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வராகும் மாணவி! உத்தரகாண்ட்டில் சுவாரஸ்யம்

‘முதல்வன்’ பட பாணியில் ஒருநாள் முதல்வராகும் மாணவி! உத்தரகாண்ட்டில் சுவாரஸ்யம்

JustinDurai

‘முதல்வன்’ பட பாணியில், உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஷிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி இன்று செயல்படுகிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 24-ம் தேதி, தேசிய பெண் குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாலின பாகுபாட்டை நீக்கி, சமூகத்தில் பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு அதிக ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி (19) செயல்பட உள்ளார்.

ஷிருஷ்டி முதல்வராக செயல்படும்போது, அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத்தும் உடனிருப்பார். இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கிறது. உத்தரகாண்டின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து இவர் பணியாற்ற உள்ளார். அப்போது, அரசின் பல்வேறு நலத் திட்டங்களையும் இவர் ஆய்வு செய்கிறார்.

ரூர்கியில் உள்ள பி.எஸ்.எம். பிஜி கல்லூரியில் விவசாய பாடப்பிரிவில் மூன்றாமாண்டு இளங்களை அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி இது பற்றி கூறுகையில், ‘’நான் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். ஆனால் அதே சமயம், மக்கள் நலத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும்போது இளைஞர்கள் மிகச் சிறந்த முறையில் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் எனது சிறந்தப் பணியை வெளிப்படுத்துவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

2018-ஆம் ஆண்டு முதல் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் சிறுவர்களுக்கான சட்டப்பேரவையில் ஷிருஷ்டி கோஸ்வாமி முதல்வராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.