இந்தியா

காங்கிரஸில் இருந்து விலகிய ஹார்திக் படேல் பாஜகவில் இணைகிறார்!

காங்கிரஸில் இருந்து விலகிய ஹார்திக் படேல் பாஜகவில் இணைகிறார்!

JustinDurai

காங்கிரஸ் கட்சியின் தலைமையின் மீது அதிருப்தி ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி இருந்த ஹர்திக் படேல் வரும்  ஜூன் 2ம் தேதி பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்த நபர் ஹர்த்திக் படேல். அந்த அடிப்படையில் குஜராத் அரசியலில் தங்களது கரத்தை வலுப்படுத்த கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அவரை சேர்த்துக்கொண்டது. பின்னர் ஹர்திக் படேல் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் குஜராத் மாநிலத்தில் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் நடத்திய பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களில் முன்னின்று வேலை பார்த்தார் ஹர்திக் பட்டேல்.

இருப்பினும் கடந்த சில வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்கள் தன்னை ஓரங்கட்ட நினைப்பதாகவும் கட்சியில் தலைமை தனது குறைகளை தீர்த்து வைக்கும் என தான் நம்புவதாக கூறிவந்தார்.

மற்றொரு பக்கம் குஜராத் காங்கிரசில் உட்கட்சி பூசல் முற்றிக்கொண்டு வந்தது.  இந்நிலையில் கட்சியின் தலைமையாலும் ஓரங்கட்டப்பட்ட ஹர்திக் படேல் குஜராத் மாநிலத்தின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். குஜராத் மாநிலத்தில் தேர்தல் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர் விரைவில் ஆம் ஆத்மி அல்லது பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபமாக  பாரதிய ஜனதா கட்சியை அவர் புகழ்ந்து வந்த நிலையில்  படேல் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளப் போகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  ஜூன் 2ம் தேதி குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கூடிய விழாவில் ஹர்திக் படேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என அம்மாநில பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவின் கோட்டையாக உள்ள குரஜாத்தில் ஹர்திக் படேலை வைத்து பிடித்துவிடலாம் என திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கனவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளார் ஹர்திக் பட்டேல்.

இதையும் படிக்கலாம்: 'மோடிஜியின் சாதனைகளை பட்டியலிட ஒரு யுகம் போதாது!'- வாசகர்களின் கமெண்ட்ஸ்! #LikeDislike