ஹர்திக் பாண்டியாவிற்கும் அவருடைய மனைவியான நடாஷாவிற்கும் இடையே பிரிவு ஏற்பட்டதாகவும், அவர்கள் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வைரலாகின. அதற்கு உதாரணமாய், இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை நடாஷா ஸ்டான்கோவிக் தன்னுடைய வலைதளங்களில் இருந்து நீக்கியதும், அதுபோல் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்காததும், அவருடைய பிறந்த நாளுக்கு ஹர்திக் வாழ்த்து சொல்லாததும் காரணங்களாகச் சொல்லப்பட்டன. எனினும், விவாகரத்து / பிரிந்து வாழ்தல் என எதையும் ஹர்திக் பாண்டியாவோ அவரது மனைவி நடாஷாவோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ உறுதிப்படுத்தவில்லை.
இந்த செய்தி வைரலான நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் மீண்டும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதனால், அவர்களுக்கு எந்த விரிசலும் இல்லை என ஊகிக்கப்பட்டது.
ஆயினும், உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில், நடாஷா கலந்துகொள்ளவில்லை. அவர்களது மகனும், க்ருணால் பாண்டியாவின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். இதனால், ஹர்திக் மற்றும் நடாஷா பற்றிய பேச்சுகள் மீண்டும் விமர்சனமானது.
இத்தகைய சூழலில் மீண்டும் ஒரு செய்தி வைரலானது. நடாஷா ஸ்டான்கோவிக் வீடியோ பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், "ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையையோ அல்லது குணாதிசயங்களையோ எப்படி நாம் இவ்வளவு விரைவாகத் தீர்மானித்து விடுகிறோம்? நம் குணாதிசயங்களை மீறி யாராவது ஒருவர் செயல்பட்டால், எந்தவோர் அனுதாபமும் இன்றி அவர்களை உடனே இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம்.
ஒருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. அதனால் மனிதர்கள் குறித்துத் தீர்மானித்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சற்றுப் பொறுமையாக எதையும் அணுகுவது நல்லது" என தெரிவித்திருந்தார். இது விவகாரத்து தொடர்பான கருத்துக்களுக்குத்தான் என ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் 4 வருட குடும்ப வாழ்வில் இருந்து பிரிவதாக இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள பதிவில், “4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததற்குப் பின், நானும் நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒன்றாக இருப்பதற்கு எங்களால் முயன்ற அனைத்தையும் மேற்கொண்டோம். ஆனால், இதுவே எங்களுக்கு சிறந்த மற்றும் சரியான முடிவு என்று நாங்கள் நம்புகிறோம்.
குடும்பமாக வளர்ந்தபோது நாங்கள் அனுபவித்த மகிழ்ச்சி, இருவரும் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொண்ட மரியாதை மற்றும் தோழமை போன்றவற்றை எடுத்துக்கொண்டால் இது எங்களுக்கு கடினமான முடிவுதான். எங்கள் மகன் அகஸ்த்யா எங்களது இருவரது வாழ்விலும் மையமாக இருப்பார். அவரது மகிழ்ச்சிக்காக எங்களால் இயன்ற அனைத்தையும் வழங்க முயற்ச்சிப்போம். இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய தனிப்பட்ட உரிமைக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.