இந்தியா

சீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட போலீசார்... பொங்கி எழுந்த ஹர்பஜன்

சீக்கியரின் தலைப்பாகையை தட்டிவிட்ட போலீசார்... பொங்கி எழுந்த ஹர்பஜன்

EllusamyKarthik

மேற்கு வங்காளத்தில் நேற்று நடைபெற்ற பாஜக போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி செய்துள்ளனர்.

அப்போது அந்த கூட்டத்தில் இருந்த சீக்கியர் ஒருவரை மேற்கு வங்க காவலர் ஒருவர் லட்டியால் தாக்கியுள்ளார். 

அதை அந்த சீக்கியர் தடுக்க முயன்ற போது அவரது தலைப்பாகையை தட்டிவிட்டதோடு, தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றுள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சூழலில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். 

“இது நடந்திருக்கவே கூடாது. இந்த விவகாரத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் முதல்வரே” என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜியை டேக்  செய்துள்ளார் ஹர்பஜன்.

போலீஸ் தாக்குதலுக்கு ஆளான சீக்கியர் பல்விந்தர்  சிங் எனவும். அவர் பாஜக தலைவர் ப்ரியங்கு பாண்டேவின் மெய் காப்பாளர் எனவும் தெரியவந்துள்ளது.

போலீசாரின் செயலுக்கு பாஜக -வினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ‘அவர் போராட்டத்தில் ஆயுதத்தோடு பங்கேற்றதால் அப்படி செய்தோம்’ என போலீசார் தெரிவித்துள்ளனர்.

“எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்காத நான் முன்னாள் ராணுவ வீரன். நான் அங்கு போராட்டம் செய்ய வந்தவன் இல்லை. தற்போது நான் ப்ரியங்கு பாண்டேவின் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளேன். அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியை தான் அங்கு செய்து கொண்டிருந்தேன். ஆனால் நான் விவரத்தை சொல்வதற்குள் போலீசார் என்னை அடித்தார்கள்” என  சொல்லியுள்ளார் பல்விந்தர் சிங்.