’ஹனுமன் தலித் அல்ல, அவர் பழங்குடி இனத்தவர்’ என தேசிய பழங்குடி ஆணைய தலைவர் கூறியுள்ளது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில், பிரசாரப் பேரணியில் கலந்துகொண்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ‘ஹனுமன் ஒரு காட்டுவாசி. அவர் ஒரு தலித். ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர். அவரைப்போல வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். ராம பக்தர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள்’ என்றார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையானது. ’சாதி ரீதியாக, தெய்வங்களையும் பாஜக பிரித்துவிட்டது’ என்று குற்றம் சாட்டியது. ராஜஸ்தான் மாநில சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா, யோகி ஆதித்யா நாத்தின் பேச்சு ஹனுமன் பக்தர்களை காயப்படுத்திவிட்டதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளார்.
இந்நிலையில், தேசிய பழங்குடியின தலைவர் நந்த் கிஷோர் சாய், ஹனுமன் பழங்குடியி னத்தைச் சேர்ந்தவர்தான், அவர் தலித் அல்ல என்று தெரிவித்துள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.