சமீபகாலமாக காடுகள் அழிக்கப்படுவதாலும், வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களாலும் காடுகளில் உள்ள யானைகள் உணவினைத் தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகிறது. அப்படி வரும் யானைகள் சில வழித்தடங்களில் வரும் ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு உயிரையும் விடும் சம்பவங்களும் அவ்வவ்போது நிகழ்கின்றன. இப்படி ஒரு சம்பவம்தான் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கவுகாத்தி புறநகரில் உள்ள ஜாகிரோட் பகுதியில் அதிகாலை 5 மணியளவில் ஒரு யானை உணவு தேடி ரயில் தடம் வழியாக நடந்து வந்துள்ளது. அச்சமயத்தில் அதிவேகமாக வந்த விரைவு ரயில் ஒன்று யானைமீது மோதியுள்ளது.
ரயில் அதிவேகமாக மோதியதால், யானையின் உடலிலும், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் யானை தட்டுத்தடுமாறி எழுந்துச்செல்ல முற்பட்டது. இரண்டடி எடுத்து வைத்த யானையால் அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை. இந்த காணொளி பார்ப்பவர்களின் கண்களையும் குளமாகச் செய்யும். ரயில் மோதி யானை விபத்துக்குள்ளாகும் காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.
யானை கடக்கும் பகுதியாக இருந்தால் அப்பகுதியில் ரயிலுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் இருக்கும். ஆனால் யானை கடந்த பகுதி யானைக்கான வழித்தடம் இல்லாததால் அப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டு கருவி இருக்கவில்லை.
அதிகாலை 5 மணிக்கு இருள் சூழ்ந்த நிலையில் யானை வழித்தடத்தில் நடந்து வந்ததை ரயில் லோகோ பைலட் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் யானைக்கு சில அடிகள் தூரம் வரும் பொழுது கவனித்து பிரேக் போட்டு இருக்கிறார். இருப்பினும் யானையின் மீது ரயில் மோதியுள்ளது. யானை இறந்தது குறித்து அப்பகுதி மக்கள் வருத்தமடைந்துள்ளனர்.