இந்தியா

கிச்சனில் டீ போடச்சென்ற பெண் : அலறியபடி ஓடி வந்த சம்பவம்

கிச்சனில் டீ போடச்சென்ற பெண் : அலறியபடி ஓடி வந்த சம்பவம்

webteam

குருகிராமில் கிச்சனுக்கு டீ போடச் சென்ற பெண் ஒருவர், அங்கு 5 அடி நீள மலைப்பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சதிஷ் குமார் கவுதம். இவர் பிவானி பகுதியில் ஆட்டோமொபைல் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமன் (35) குடும்பத் தலைவியாக செயல்பட்டு வருகிறார். காலையில் சதிஷ் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த சுமர், டீ போடுவதற்காக சமையலறைக்குச் சென்றுள்ளார். அவர் டீ போடும் பாத்திரத்தை எடுத்து வைத்து, அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அலமாறிக்கு அடியில் ஏதோக நகர்ந்து செல்வது போன்று தெரிந்துள்ளது. சற்று தள்ளி நின்று, அது என்ன? எனக் கவனித்துள்ளார் சுமன். அப்போது ஒரு நீண்ட மலைப்பாம்பு அங்கு சுருண்டிருந்துள்ளது. 

உடனே கிச்சனில் இருந்து அலறியபடி ஓடி வந்த சுமன், தனது கணவர் சதிஷூக்கு போன் செய்துள்ளார். அவர், “நீ பயப்படாதே, நான் வனவிலங்கு பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்துகிறேன்” எனக்கூறியுள்ளார். பின்னர் சதிஷ் வனவிலங்கு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்குள் சுமன், அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததைக்கூறி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு  சுமன் வீட்டிற்கு வனத்துறை அதிகாரி அனில் கந்தாஸ் வந்துள்ளார். வீட்டிற்குள் வந்த அவர், அங்கிருந்தவர்களை பயப்பட வேண்டாம் என்றும், சத்தம்போட்டு பாம்பை தொந்தரவு செய்யவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர் அலமாறிக்கு அடியில் இருந்த மலைப்பாம்பை, சாதுர்யமாக பிடித்துள்ளார். பிடித்துப் பார்த்ததில் அது 5 அடி நீள மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது. குருகிராம் என்பது நகரப்பகுதியாகும். முதல்முறை ஒரு நகரப்பகுதியில் பிடிக்கப்படும் மலைப்பாம்பு இதுதான் என அனில் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் பாம்பு போன்ற உயிரினங்களை பார்த்தால் அதனை கொன்றுவிடாமல், வனவிலங்குப் பாதுகாப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.