இந்தியா

2017ல் குர்மீத் ராம் ரஹீம்... 2014ல் ராம்பால்..!

webteam

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குர்மீத் ராம் ரஹீம் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி அதில் 30 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

குர்மீத் ராம் ரஹீம் போலவே இந்தியாவில் பல சாமியார்கள் வழக்குகளையும் தண்டனைகளையும் சந்தித்துள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள் எப்படி வன்முறையில் ஈடுபட்டனரோ, இதே போல் ஹரியானாவைச் சேர்ந்த மற்றொரு சாமியாருக்கும் அவரது ஆதரவாளர்கள் இதே போன்ற வன்முறையில் ஈடுபட்டனர். அந்தச் சாமியாரின் பெயர் ராம்பால்.

இவரும் ஹரியானாவில் பிரபலமான சாமியார்தான். கபீரின் பாதை தனது பாதை எனக் கூறிய இவரது ஆசிரமத்தின் பெயர் சட்லோக் ஆசிரமம். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆர்யசமாஜ் அமைப்பைப் பற்றி இவர் ஒரு கருத்தைச் சொல்ல, அது அந்த அமைப்பினருக்கு ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் 2006 ஜூலை 12ம் தேதி ராம்பால் ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 2010ல் இருந்து 14 வரையில் நீதிமன்றம் 42 முறை சம்மன் அனுப்பியும் ராம்பால் ஆஜராகவில்லை. கடைசியாக 2014ல் நவம்பர் 19ம் தேதியன்று ராம்பால் கைது செய்யப்பட்டார். அதற்கு முன்பு பல போராட்டங்கள் நடந்தன.

முதலில் நவம்பர் 9ம் தேதி அவரைக் கைது செய்ய சட்லோக் ஆசிரமத்திற்கு போலீசார் சென்ற போது, ராம்பாலின் ஆதரவாளர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு மனிதச் சுவரைப் போல நின்று போலீசாரை ஆசிரமத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, ராம்பாலைக் கைது செய்ய வேண்டுமானால் அதற்கு முன் அவரது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேரைக் கொல்ல வேண்டியிருக்கும் என்றனர். அன்றைய கைது முயற்சி தோல்வியில் முடிந்தது.

பின்னர் 18ம் தேதி ஹிஸ்ஸாரில் உள்ள சட்லோக் ஆசிரமத்தில் ராம்பால் மறைந்திருந்தார். அங்கு சென்ற போலீசாரை ராம்பால் ஆதரவாளர்கள் உள்ளே விடவில்லை. பின்னர் பக்கவாட்டுச் சுவரை உடைத்து, போலீசார் அதிரடியாக உள்ளே புகுந்து ராம்பாலைக் கைது செய்தனர்.