மணிப்பூரில் 11 குக்கி போராளிகள் சுட்டுக்கொலை pt web
இந்தியா

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த துப்பாக்கிச் சூடு; 11 குக்கி போராளிகள் சுட்டுக்கொலை..நடந்தது என்ன?

மணிப்பூரில் பாதுகாப்பு படைகளுடன் நடந்த மோதலில் குறைந்தது 11 குக்கி இனபோராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சில Crpf வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Angeshwar G

செய்தியாளர் பாலவெற்றிவேல்

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பாதுகாப்பு படைகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 குக்கி சமூகத்தைச் சேர்ந்த போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் சில மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

manipur

ஜிரிபாமின் போரோபெக்ரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குக்கி போராளிகள் திரண்டு அங்கிருந்த காவல் நிலையத்தின் மீது, துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அப்பகுதியின் அருகே அமைந்துள்ள ஜகுரடோர் கரோங் எனும் இடத்தில், மெய்தி சமூக மக்கள் சிலரது வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அருகே உள்ள சந்தையில் சில கடைகளுக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து சிஆர்பிஎஃப் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதுவே துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சண்டை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரோபெக்ரா காவல்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நிவாரண முகாமில் இருந்த சில பொதுமக்களைக் காணவில்லை என்றும், அவர்கள் தாக்குதல் காரணத்தால் தலைமறைவாக இருக்கின்றனரா அல்லது கடத்தப்பட்டார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜிரிபாம் மாவட்டத்தின் துணை ஆணையர் கிருஷ்ணகுமார் கூறுகையில், “இன்று மதியம் காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். மத்திய பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் 31 வயது பழங்குடிப் பெண் எரித்துக் கொல்லப்பட்டதில் இருந்து அப்பகுதி பதட்டமாக உள்ளது” என தெரிவித்தார்.

கடந்த வியாழன் இரவு ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜைரான் ஹ்மார் கிராமத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட 4 நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணிப்பூர்

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த வருடம் மே மாதம் தொடங்கிய வன்முறை போராட்டம் இன்னும் முற்றுப்பெறாமல் இருப்பதன் காரணமாக மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. தற்போது மேலும் 11 குக்கி இன போராளிகள் கொல்லப்பட்டுள்ளதன் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.