சிசிடிவி காட்சிகள் pt web
இந்தியா

‘இவரே மறைச்சு வைப்பாராம், அப்றம் இவரே கண்டுபிடிப்பாராம்’ CCTV-யால் அம்பலமான உ.பி போலீஸின் செயல்?

“என் கணவருக்கு சொந்தமான பைக்கில் போலீஸால் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறில் எதிர்த்தரப்பினருடன் இணைந்துகொண்டு காவல்துறையினர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்” - பாதிக்கப்பட்டவரின் மனைவி

PT WEB

காவல்துறையினர், தங்களுக்கு பிடிக்காத ஒருவரின் வீட்டில் ஏதேனும் ஒரு ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு, பின் அவர்களே அதை தேடுவதுபோல நடித்து, ‘இதோ பாருங்க இங்கதான் ஒளிச்சு வச்சிருக்காங்க’ என ஏதோ புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடித்தது போல பாவ்லா செய்யும் காட்சிகளை திரைப்படத்தில் கண்டிருப்போம். முதல்வன் படத்தில்கூட இப்படியொரு காட்சி காண்பிக்கப்பட்டு, வில்லனான ரகுவரன் கதாபாத்திரம், ‘இவரே குண்டு வைப்பாராம், அப்றம் இவரே எடுப்பாராம்’ என சொல்வதுபோல இருக்கும்.

இதை எதுக்கு இப்போ சொல்கிறோமென்றுதானே யோசிக்கிறீங்க? அட இங்க அப்படியொரு சம்பவம், நிஜமாவே உத்தரப்பிரதேசம் மீரட்டில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் வசிப்பவர் அஷோக் தியாகி. இவர் சமீபத்தில் நிலத்தகராறு வழக்கொன்றில் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறார். இவரது மனைவியின் பெயர் ராக்கி. இவர்களது வீட்டில் சில காவலர்கள் யாரும் கவனிக்காத நேரத்தில் உள்நுழைத்து, அங்கிருந்த பைக்கில் துப்பாக்கியை மறைத்து வைத்து சென்றுள்ளனர்.

பின் எதுவும் அறியாததுபோல, அவர்களே அதை கண்டுபிடித்துள்ளனர். இவையாவும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியதால், உண்மை அம்பலமாகியுள்ளது. அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் பற்றி அஷோக் தியாகியின் மனைவி கூறுகையில் “எனது கணவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் இந்த துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறில் எதிர்த்தரப்பினருடன் இணைந்துகொண்டு காவல்துறையினர் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

வீடியோ காட்சிகளின்படி காவல்துறையினர் முதலில் வீட்டு வாயிலின் முன் பேசிக்கொண்டுள்ளனர். பின் அனைவரும் சென்ற பின் ஒரு காவலர் மட்டும் வீட்டிற்குள் சென்று அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டியில் ஏதோ ஒரு பொருளை வைத்துவிட்டு வருகிறார். பின் அனைவரையும் அழைத்து மீண்டும் அந்த இடத்தை சோதனையிடுகிறார்.

அப்போது மறைத்து வைத்த பொருளை தானே புதிதாக கண்டுபிடிப்பதுபோல செய்கிறார். உடனே அனைவரும் அங்கு சில நேரம் நின்று பேசுகின்றனர். பின் அங்கிருந்த ஒருவரை கைதுசெய்து அழைத்துக் கொண்டு வெளியே செல்கின்றனர்.

வீடியோ வைரலான நிலையில், மீரட் காவல்துறை கண்காணிப்பாளர் தேஹத் கமலேஷ் பகதூர் “சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு நடந்திருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று X வலைதளத்தில் உறுதியளித்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு காவலர்கள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தில் காவலர்கள்தான் குற்றவாளிகளாக செயல்பட்டனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படாவிட்டாலும், வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி நிலவுகிறது.