குஜராத்தில் தனது காதலனுடன் உறவில் இருந்தபின் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இளம்பெண் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார், “குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், தன் ஆண் நபருடன், 23 வயதான நர்சிங் பட்டதாரி தங்கியுள்ளார். அப்போது இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு உடலுறவின்போது அதிகளவில் ரத்தப்போக்கு வெளியேறி உள்ளது. இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண்ணின் காதலர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ரத்தப்போக்கை எப்படி நிறுத்துவது என்பது குறித்து ஆன்லைனில் தகவல் தேடி நேரத்தைக் கடத்தியுள்ளார்.
ஒருகட்டத்தில் ரத்தப்போக்கு அதிகமாகியதல் அந்தப் பெண் மயங்கியிருக்கிறார். இதனால் பயந்துபோன காதலன், தனது நண்பர் ஒருவரை ஹோட்டலுக்கு வரவழைத்து அவர் உதவியுடன் அந்தப் பெண்ணை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில், உடலுறவுக்கு பிறகு அதிக ரத்தம் வெளியேறியதால் அவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்ந்த செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்றுள்ளது. முன்னதாக, காதலிக்கு ரத்தப்போக்கு வெளியேறுவது தொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் வருவதற்குள் அந்தப் பெண் இறந்துவிட்டார்.