குஜராத் வன்முறை வழக்கில் நரேந்திர மோடி குற்றமற்றவர் எனக் கூறி சிறப்பு புலனாய்வு குழு விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை வரும் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட கலவரத்தில் கிட்டத்தட்ட 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் பின்னணியில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் உயரதிகாரிகள் இருந்ததாகக்கூறி வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னணியை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி மற்றும் 63 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் இல்லை என கடந்த 2012ஆம் ஆண்டு அவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.
தொடர்புடைய செய்தி: ’டீக்கடைகாரர்’ முதல் ’பிரதமர்’ வரை: மோடி பற்றிய 71 சுவராஸ்ய தகவல்கள் - பிறந்தநாள் பகிர்வு!
இதை எதிர்த்து ஜக்கியா ஜாஃப்ரி என்பவர் தொடர்ந்த வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து ஜக்கியா ஜாஃப்ரி தரப்பில் 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை வரும் 26ஆம் தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.