குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என 27 பேர் உயிரிழந்தனர். அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிவிட்டதாகவும், உடல்களை அடையாளம் காண உயிரிழந்தவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காவல்துறை விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. விளையாட்டு அரங்கில் நுழையவும், வெளியேறவும் ஒரே ஒரு வழி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அரங்கின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 2,000 லிட்டர் டீசல் விளையாட்டு அரங்கில் இருக்கும் ஜெனரேட்டர்களுக்காக சேமித்து வைக்கப்பட்டதாகவும், கோ கார்ட் பந்தயத்திற்காக 1,000 முதல் 1,500 லிட்டர் பெட்ரோல் வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அங்கிருந்த பெட்ரோல், டீசல் ஆகியவற்றில் தீப்பிடித்துள்ளது. தீ வேகமாக பரவியதால் விளையாட்டு அரங்கம் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட எஸ்ஐடி குழுவை குஜராத் அரசு அமைத்துள்ளது. 72 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, விபத்து தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கேளிக்கை விளையாட்டு அரங்கத்தின் உரிமையாளர் யுவராஜ் சிங் சோலங்கி, மேலாளர் நிதின் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள குஜராத் உயர்நீதிமன்றம், இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்துள்ளது. முறையான ஒப்புதல்களின்றி இதுபோன்ற கேளிக்கை விளையாட்டு அரங்கம் இயங்கி வருவதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.