செய்தியாளர்: ஜி.எஸ். பாலமுருகன்
ஜெயின் மதத்தினர் மிகவும் போற்றி மதிக்கும் நகரம் பாலிதானா (PALITANA). அவர்களின் புனித யாத்திரை தலங்களில் முதன்மையானது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில், சத்ருஞ்சய மலையைச் சுற்றி அமைந்துள்ள பாலிதானா நகரின் 800க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இதில் மிகவும் புகழ்பெற்றது ஆதிநாத் கோயிலாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர்.
ஜெயின் கோவில் நகரம் என்ற புனைப்பெயரைப் பெற்ற பாலிதானா, ஆன்மிக முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நகரமாகவும் உள்ளது.
இங்கு அசைவ உணவு சட்டவிரோதமானது. விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள உலகின் முதல் நகரம் என்ற வரலாறையும் படைத்துள்ளது. பாலிதானாவின் இந்த முக்கிய முடிவு ஜெயின் சமூகத்தின் கலாசாரம், வலுவான செல்வாக்கு மற்றும் கொள்கைகளை பிரதிப்பலிப்பதாக அமைந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையில் ஜெயின் சமூகத்தினர் ஒரு சதவிகிதம் அளவில் உள்ளனர்.
பாலிதானாவில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடக்கோரி, சுமார் 200 ஜெயின் துறவிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகிம்சையை தங்கள் நம்பிக்கையின் மையக் கோட்பாடாகக் கருதும் ஜெயின் சமூகத்தினர், மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
ஜெயின் சமூகத்தினரை பொறுத்தவரை விலங்குகளை சாப்பிடும் வழக்கம் அவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை கூட தவிர்க்கிறார்கள். அதுதான் அசைவ உணவு தடைக்கு முக்கிய காரணமாகும். பாலிதானாவை முன்மாதிரியாக பின்பற்றி குஜராத்தில் உள்ள மற்ற நகரங்களான ராஜ்கோட், வதோதரா, ஜூனாகத், அகமதாபாத்தில் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த தொடங்கியுள்ளன.
மக்களின் உணர்வுகளை மதிக்கவும், பொது இடங்களில் இறைச்சியைப் பார்ப்பதால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களைத் தடுக்கவும் தடை அவசியம் என்ற ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன. பாலிதானா மற்றும் குஜராத்தின் பிற நகரங்களில் அசைவ உணவுகளை தடை செய்யும் முடிவு ஒரு வரலாற்று மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே போதித்த தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மண்ணில் அசைவ உணவுகளை தடை செய்யும் நடவடிக்கை புதிதல்ல. என்றாலும், சமூக மற்றும் கலாசார கட்டமைப்பில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உலகம் உற்று நோக்குகிறது.