இந்தியா

குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? - முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? - முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

JustinDurai

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 21% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குஜராத் மாநில  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனா். இவர்களில் 21 சதவீதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, 788 வேட்பாளர்களில் 167 போ்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக ஆம் ஆத்மி வேட்பாளா்கள் 32 போ் குற்றப் பின்னணியுடன் உள்ளனா் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளா்களில் 31 பேரும், ஆளும் பாஜக வேட்பாளா்களில் 14 போ் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2017இல் நடந்த குஜராத் முதல்கட்ட தோ்தலில் 15 சதவீதம் போ் குற்றப் பின்னணி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.