இறந்த மாணவர் NGMPC22 - 147
இந்தியா

குஜராத் | பல மணி நேரம் நிற்கவைத்து ரேக்கிங்.. மயங்கி விழுந்து மருத்துவ மாணவர் உயிரிழந்த சோகம்!

குஜராத்தில் ராக்கிங் தொந்தரவால் மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Jayashree A

குஜராத்தில் ரேக்கிங் தொந்தரவால் மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராக்கிங் செய்வது குற்றம் என்றபோதிலும் இக்குற்றமானது அங்கொன்றும் இங்கொன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

குஜராத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் அனில்மெத்தானியா (18). இவர் தர்பூர் படானில் இயங்கிவரும் GMERS மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். சம்பவதினத்தன்று இவர் கல்லூரிக்கு வந்த சமயம், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களில் சிலர், “அறிமுகம்” என்ற பெயரில் இவரை மூன்று மணிநேரம் நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தக்கல்லூரியை பொருத்தமட்டிலும் “அறிமுகம்” என்ற வார்த்தையானது மாணவர்களை ராக்கிங் செய்வதற்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ”அறிமுகமாக” அனில்மெத்தானியாவை மூன்று மணி நேரம் நிற்கவைத்துள்ளனர் மூன்றாம் ஆண்டு மாணவர்கள். மூன்று மணி நேரம் நின்றுக் கொண்டிருந்த அனில் சுருண்டு விழுந்து மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாகக் கூறப்படுகிறது. சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அதன் அறிக்கை மரணத்திற்கான காரணம் குறித்த கூடுதல் தகவல்களை வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அனிலின் உறவினர் தர்மேந்திரா கூறுகையில், “நேற்று எங்களுக்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது. அதில், அனில் சுருண்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. நாங்கள் இங்கு வந்தபோது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை ராக்கிங் செய்தது எங்களுக்குத் தெரிந்தது. எங்களுக்கு நீதி வேண்டும்” என்று அவர் கூறினார்.

மருத்துவக் கல்லூரியின் டீன் ஹர்திக்‌ஷா கூறுகையில், ”அவர் மயங்கி விழுந்ததை அறிந்தவுடன், நாங்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் ரேகிங் செய்யப்பட்டதாகவும், மூன்று மணி நேரம் நிற்க வைத்ததாகவும் போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். நாங்கள் இதுக்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்” என்று கூறியுளார்.

இது குறித்து மூத்த போலிஸ் அதிகாரி கே.கே.பாண்டியா கூறுகையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். முன்னதாக, எஃப் ஐ ஆரில் 15 மூத்த மாணவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக பிரபல பத்திரிக்கையில் செய்தி இடம்பெற்றுள்ளது.

உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி வளாகங்களில் ராகிங்கை அனைத்து வடிவங்களிலும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.