விபத்து தெரிவிக்கும் பலகை PT
இந்தியா

“என்மீது FIR போடுங்க; என் கவனக்குறைவே காரணம்”- தெருநாயால் ஏற்பட்ட சாலை விபத்தில் மனைவியை இழந்த கணவர்

குஜராத் - எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே வந்த நாய்... ஸ்டியரிங்கை திருப்பிய நபர்... அடுத்தடுத்த நொடிகளில் ஏற்பட்ட அசம்பாவிதம்... தன்மீது எஃப்.ஐ.ஆர் பதியும்படி தானே கேட்ட துயரம்!

Jayashree A

சமீபகாலங்களில் நாய்களால் மக்கள் அவதியுறும் செய்திகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. வளர்ப்பு நாய் பிரச்னையால் இளம் பெண் மீது தாக்குதல், தோழியின் நாயை காப்பாற்ற சென்ற இளைஞர் பலி என நாய்களால் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் பற்றிய பல செய்திகள் வெளிவந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கி வருகிறது.

அந்தவகையில் நாயை காப்பற்ற நினைத்து மனைவியை இழந்த ஒருவரின் சோகமான நிகழ்வு அகமதாபாத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்துள்ளது.

அகமதாபாத் அருகில் இருக்கும் நர்மதா மாவட்டத்தை சேர்ந்தவர் பரேஷ் தோஷி. இவர் அங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமிதா. தம்பதியர் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் இருக்கும் அம்பாஜி என்ற கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது இவர்கள் வந்த கார் ​​கெரோஜ் - கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் டான் மஹுடி என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்த சமயம், எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே பாய்ந்துள்ளது. காரை ஓட்டி வந்த பரேஷ் தோஷி நாயின் மீது காரை ஏற்றாமல் இருக்க நினைத்து ஸ்டியரிங்கை திருப்பி உள்ளார். அச்சமயம் எதிர்பாராமல் காரானது கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

தெரு நாய்கள்

இதில் அவரது மனைவி அமிதா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனால் மனமுடைந்த பரேஷ் தோஷி தன் மனைவி இறந்ததற்கு தான் கவனக்குறைவால் வாகனம் ஓட்டியதே காரணம் என்று நினைத்து குற்றவுணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார். தொடர்ந்து அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று, தன் மீது எஃப்.ஐ.ஆர் பதியும்படி கேட்டுள்ளார். இவரின் வாக்குமூலத்தின் படி காவல்துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.