கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைத்து தியேட்டர்கள், மால்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. படிப்படியாக கொரோனா தொற்று குறைந்ததால் மத்திய அரசு பொதுமுடக்கத்திலிருந்து தற்போது தளர்வுகள் அறிவித்து வருகிறது.
அதன்படி பல்வேறு தளர்வுகளின் காரணமாக நாடு இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. ஆனாலும் நீதிமன்றங்கள் தற்போதுவரை ஆன்லைனில் வழக்குகளை விசாரணை செய்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணையை யூடியூப் வழியாக நேரலை செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்.
குஜராத் தலைமை நீதிபதிகள் அமர்வு இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை ஜூம் அப்ளிகேஷன் வழியாக விசாரித்தது. இத்தகைய முயற்சியால் வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இருப்பதால் மக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.