இந்தியா

ஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ

ஒன்றரை மாத குழந்தையை கழுத்தளவு நீரில் இறங்கி மீட்ட போலீஸ் - வைரல் வீடியோ

webteam

குஜராத் மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினரும், காவலர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியதையடுத்து, கழுத்தளவு தண்ணீரிலும் கயிறு கட்டி மக்களை மேடான இடங்களுக்கு செல்ல மீட்பு படையினர் உதவினர். அங்குள்ள ஒரு வீட்டில் பிறந்து 45 நாட்களே ஆன பெண் குழந்தையும், அதன் தாயும் சிக்கியிருப்பதாக அங்கிருந்த எஸ்.ஐ கோவிந்த் சவுடாவுக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து விரைந்து வந்த அவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல், குழந்தையை துணிகளில் சுற்றி பிளாஸ்டிக் கூடையில் வைத்து சுமார் ஒன்றரை கி.மீ தூரம் வரை தலையின் மேல் சுமந்து  பத்திரமாக மீட்டார். இதனை அம்மாநில டிஜிபி  தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு பாராட்டியுள்ளார். இதன் மூலம் அந்த எஸ்.ஐ க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.