தமிழக மீனவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜெகதீஷ் கண்டேவால் தெரிவித்துள்ளார்.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் குஜராத் கடலில் தத்தளிப்பது குறித்து, புதிய தலைமுறை வாயிலாக தெரிந்துகொண்ட தமிழக அதிகாரிகள், குஜராத்
அதிகாரிகளுடன் பேசி மீனவர்கள் கரை ஒதுங்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கரை ஒதுங்கிய தங்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
செய்துகொடுக்கப்படவில்லை என்று தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அத்துடன் கடும் குளிரில் வாடுவதாகவும், படகிலேயேதான் தங்கியிருப்பதாகவும்
வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வேராவல் துறைமுகத்தில் கரைசேர்ந்துள்ள தமிழக மீனவர்களுக்கு தேவையான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக குஜராத்தின் கிர்
சோம்நாத் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் ஜெகதீஷ் கண்டேவால் தெரிவித்துள்ளார். புதியதலைமுறைக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,
"தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குஜராத் அரசு செய்து
கொடுத்துள்ளது.மீன்வளத்துறை, வேராவல் துறைமுக அதிகாரிகள் இங்குள்ளனர். தற்போது, இங்குள்ள தமிழக மீனவர்களுக்கு எந்த பிரச்னையும்
இல்லை.பாதுகாப்பாக உள்ளனர். வானிலை மாறியதும் ஊர்திரும்ப மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.