குஜராத் மாநிலம் பாமான்போர் - கட்ச் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், வகாசியா என்ற கிராமத்தில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை ஒட்டியிருக்கும் தனியார் டைல்ஸ் தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தில் அதன் உரிமையாளர்கள் சாலையை ஏற்படுத்தி சட்டவிரோதமாக சுங்கச்சாவடி அமைத்து கட்டண வசூல் செய்து வந்துள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட வகாசியா சுங்கச் சாவடியை விட இங்கு கட்டணம் பாதியாக இருந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் தனியார் சாலையைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த முறையில் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கு கட்டண வசூல் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியான நிலையில், போலி சுங்கச்சாவடி அமைத்து வசூல் வேட்டை நடத்திய ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.