vipul pt web
இந்தியா

குஜராத் முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை! என்ன காரணம்?

Angeshwar G

1996 ஆம் ஆண்டு குஜராத்தின் அமைச்சராக இருந்த விபுல் சவுத்ரி 2014 ஆம் ஆண்டு தூத்சாகர் பால்பண்ணை, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டார். அப்போது கால்நடை தீவன கொள்முதலில் ஊழல் நடந்ததாக மெஹ்சானா பி பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தது. அதன்பேரில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அதே ஆண்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்சாகர் பால்பண்ணை, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டார் விபுல் சவுத்ரி.

முதல் தகவல் அறிக்கையில் விபுல் சவுத்ரி பால்பண்ணை தலைவராக இருந்த போது, மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக ரூ.22.5 கோடி மதிப்பிலான 22.5 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனங்களை இலவசமாக, பால்பண்ணை வாரியக்கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வராமலும் டெண்டர் விடாமலும் அனுப்ப முடிவு செய்ததாக மாநில அரசு அவர்மீது குற்றம் சாட்டியது.

இந்த வழக்கில் 22 பேர் மீது மாநில அரசு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. வழக்கு நிலுவையில் இருந்த போதே 3 பேர் இறந்துவிட்டனர். மறுபறம், 4 பேர் வழக்கில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 15 பேரையும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட 15 பேரில், துத்சாகர் பால் பண்ணையின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் அடங்குவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை தவிர, 15 பேருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 15 பேரில், நிஷித் பாக்ஸி துத்சாகரின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், ரஷ்மிகாந்த் மோடி நிதித்துறையின் முன்னாள் தலைவராகவும் இருந்தனர்.