குஜராத்தில் உள்ள பள்ளிகளில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென அம்மாநில அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது
இன்றைய தேதிக்கு கையில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம் என்றுக்கூட சொல்லலாம். வயது வித்தியாசமின்றி அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். போன் என்றாலே தகவல் பரிமாற்றம் தான். ஆனால் அதைத் தாண்டி சமூகவலைதளங்கள், ஆன்லைன் கேம்கள் என எங்கெங்கோ பயணித்துக்கொண்டு இருக்கிறது ஸ்மார்ட் போன் உலகம்.
விளையாட்டு பிரியர்களை கவனத்தில் கொண்டு தினம் தினம் புதிது புதிதாக கேம்கள் களம் இறக்கப்படுகின்றன. அப்படியாக இப்போதைய ட்ரெண்டிங் கேம் பப்ஜி.பள்ளி சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை எங்கு இருக்கிறோம் என்பதை மறந்து இந்த பப்ஜி கேமை விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த விளையாட்டின் விபரீதத்தை அறிந்த குஜராத் அரசு தனது எச்சரிக்கையை தொடங்கியுள்ளது.
அதன்படி குஜராத்தில் உள்ள பள்ளிகளில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென அம்மாநில அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியது. குழந்தைகள் நல ஆணையம் அனுப்பிய அறிக்கையின் படி, பப்ஜி விளையாட்டுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகிறார்கள். இது அவர்களின் கல்வியை பெருமளவில் பாதிக்கும். அதனால் பப்ஜி விளையாட்டை தடை செய்வது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய குஜராத் குழந்தைகள் நல அமைப்புத் தலைவர் ஜக்ருதி பாண்டியா, பப்ஜி விளையாட்டை தடை செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இதனை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.