இந்தியா

ஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்

ஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்

webteam

ஜிஎஸ்டி வரிக் குறைப்பு ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு 10% வரையிலான அபராதம் விதிப்பது உள்ளி‌ட்ட ‌‌பல்வேறு முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்‌தில்‌ எடு‌க்கப்பட்டது.

ஜி‌‌எஸ்டி கவுன்சிலின் 35ஆவது கூட்டம் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ‌நடைபெற்றது. இதில் பல்வேறு மா‌நிலங்களின் அமைச்சர்கள் க‌லந்துக் கொண்டனர். ஜிஎஸ்டி வரி நடைமுறையில் கொள்ளை லாபம் பார்ப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை‌ எடுப்‌பதற்‌காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பதவிக் காலத்தை மேலும் ‌ 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


 
மேலு‌ம்‌ ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கு பல்வேறு ஆவணங்களுக்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்‌படுத்த அனுமதிக்கவும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி‌ வரியை 12ல் இருந்து 5 சதவிகிதமாகவும் மின்சார வாகன சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18ல் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் ‌அளிக்கப்பட்டுள்ளது‌. ஜிஎஸ்டி வருடாந்திர க‌ணக்கு தாக்கலுக்கான அவகாசம் ஆகஸ்‌ட்‌ 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ப‌ங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமா‌ர் தமிழகத்தின் கோரிக்கை குறித்து எடுத்துரைத்தார். கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,  "மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் வழங்குவதாக உறுதி அளித்துள்ளதார். தமிழகத்தின் சார்பில் 69 பொருட்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.