இந்தியா

ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு

ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு

webteam

ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2017 ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. அதன் பின்னர், தொடர்ச்சியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு, பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து முடிவு செய்யபட்டு வருகின்றனர். ஒரு வருடத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் 328 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தினைக் குறைத்துள்ளது. 

இந்நிலையில், தலைநகர் புதுடெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 28வது கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இதனை தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது நாப்கின்களுக்கு 12 சதவீதம் வரி விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஜிஎஸ்டி வரியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மீதான ஜிஎஸ்டியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 1000 ரூபாய் மதிப்புள்ள ஷூக்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 ரூபாய்க்குள் வாங்கும் ஷூக்களுக்கு மட்டும் தான் 5 சதவீதம் வரி இருந்தது.

இதனையடுத்து, ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.