இந்தியா

‘கடந்த 2 மாதங்களில் குறைந்துபோன ஜிஎஸ்டி வசூல்’ - புள்ளிவிவர தகவல்

‘கடந்த 2 மாதங்களில் குறைந்துபோன ஜிஎஸ்டி வசூல்’ - புள்ளிவிவர தகவல்

webteam

ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டுடன்‌ ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் அதிகமாகியிருந்த நிலையில், சென்ற இரண்டு மாதங்களாக குறைந்திருப்பது மத்திய நிதியமைச்சகத்தின் புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி அதிகமாக வசூலாகியிருக்கிறது. 2018-19ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 459 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில், 2019-20ஆம் நிதியாண்டு ஏப்ரலில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 865 கோடி‌ ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல், கடந்த ஆண்டு மே மாதத்தில் 94 கோடியே 16 ஆயிரம் ரூபாய் வசூலான நிலையில், இந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு லட்சத்து 289 கோடி ரூபாயாக உ‌யர்ந்திருக்கிறது. முந்தைய நிதியாண்டின் ஜூன் மாதத்தில் 95 ஆயிரத்து 610 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில், நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் 99 ஆயிரத்து 939 கோடி‌ ரூபாயாக வசூல் அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டின் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 83 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 93 ஆயிரத்து 960 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில், ‌நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 98 ஆயிரத்து 202 கோடி ரூபாயாக வசூல் அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் 94 ஆயிரத்து 442 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில் 91 ஆயிரத்து 916 கோடி ரூபாயாக ‌வசூல் குறைந்தது. 

அதேபோல், சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 710 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்ட நிலையில், இந்த அக்டோபரில் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக வசூல் குறைந்துள்ளது.