இந்தியா

வருடத்தின் முதல் மாதத்திலேயே இத்தனை கோடிகள் ஜி.எஸ்.டி வசூலா? புதிய சாதனை செய்த வசூல்!

வருடத்தின் முதல் மாதத்திலேயே இத்தனை கோடிகள் ஜி.எஸ்.டி வசூலா? புதிய சாதனை செய்த வசூல்!

webteam

“இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 1,55,922 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி இருக்கிறது. இது, இரண்டாவது அதிகபட்ச மாதாந்திர ஜிஎஸ்டி வசூல்” என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் 1.68 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டது. இந்த வரி வசூல், இதுவரை காணாத மாதாந்திர உச்சபட்ச வசூலாகும். இதற்கு அடுத்தபடியாக இந்த ஜனவரி மாதத்தில் அதிகபட்ச ஜிஎஸ்டி வசூல் நடைபெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் மூன்றாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளது ஜிஎஸ்டி வரி வசூல்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், ‘இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை வசூலிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி சென்ற நிதியாண்டில் இதே சமயத்தில் வசூலிக்கப்பட்டதைவிட 24 சதவிகிதம் அதிகம்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நிதி அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “31.01.2023 அன்று மாலை 5 மணி வரை மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,55,922 கோடியாகும். இதில் ஜிஎஸ்டி ரூ.28,963 கோடியையும், எஸ்ஜிஎஸ்டி ரூ.36,730 கோடியையும், ஐஜிஎஸ்டி ரூ.79,599 கோடியையும் (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.37,118 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,630 கோடியையும் (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ.768 கோடி உட்பட) வருவாயாகப் பெற்றுள்ளது.

இதிலிருந்து 38,507 கோடி ரூபாயை CGSTக்கும், 32,624 கோடி ரூபாயை SGST மற்றும் IGSTக்கு வழக்கமான தீர்வையாக செலுத்தியுள்ளது. வழக்கமான தீர்வைக்குப் பிறகு ஜனவரி 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் CGSTக்கு ரூ.67,470 கோடியும், SGSTக்கு ரூ.69,354 கோடியும் ஆகும்.

நடப்பு நிதியாண்டில் ஜனவரி 2023 வரையிலான வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருவாயைவிட 24% அதிகமாகும். சரக்குகளின் இறக்குமதியிலிருந்து இந்த காலகட்டத்திற்கான வருவாய் 29% அதிகம் மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனை (சேவைகளின் இறக்குமதி உட்பட) மூலம் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த ஆதாரங்களில் இருந்து வருவாயைவிட 22% அதிகமாகும். அதுபோல், நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.50 லட்சம் கோடியைத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். டிசம்பர் 2022ல், 8.3 கோடி ரூபாய்க்கான இ-வே ரசீதுகள் தாக்கல் செய்யப்பட்டன. இது இதுவரை இல்லாத அதிகபட்சமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.