விவசாயிகள் போராட்டம் pt web
இந்தியா

நீளும் ஆதரவு கரங்கள்.. 29 ஆம் தேதிக்கு பின் விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கிய பேரணி!

டெல்லியை முற்றுகையிட சென்ற விவசாயிகள் ஷம்பு எல்லையில் முகாமிட்டுள்ளனர். இருப்பிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாயிகள் என்ன செய்கிறார்கள் என்பதை களத்தில் இருந்து பதிவு செய்கிறது புதிய தலைமுறை..

PT WEB

நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விவசாயிகள் வெகுண்டெழுந்து தலைநகரை முற்றுகையிட சென்றிருப்பது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசுடனான 5 கட்ட பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து எல்லையில் தங்கி இருக்கும் விவசாயிகள், வரும் 29ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப் - ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ள நிலையில், தங்களது டிராக்டர்களையே அவர்கள் வசிப்பிடமாக மாற்றியுள்ளனர். உழைத்து களைத்து வயல்வெளியில் உறங்கிய தங்களுக்கு டிராக்டரில் வசிப்பது பெரிய விஷயமல்ல என்பதே விவசாயிகளின் பதிலாக இருக்கிறது. ஒவ்வொரு டிராக்டரிலும் 5 பேர் வரை படுத்து உறங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், பழங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் டிராக்டர்களில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், செல்போன்களை சார்ஜ் செய்வதற்கும், மின் விளக்குகள் மற்றும் மின் விசிறிகளை பயன்படுத்துவதற்கும் ஏதுவாக பேட்டரி வைக்கப்பட்டுள்ளது. அதிக காற்று மற்றும் மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் மூலம் டிராக்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளுக்கு உதவும் ஆதரவு கரங்களும் நீண்டுகொண்டே செல்கின்றன. ஷம்பு எல்லைப் பகுதியில் பயிற்சி மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகளுக்கு காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்டவற்றுக்காக மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மேலும், உடல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும் விவசாயிகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏதுவாக தன்னார்வலர்கள் சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிலர் தங்களது சொந்த வாகனங்களையும் விவசாயிகளுக்கு உதவுவதற்காக வழங்கி இருக்கிறார்கள். 6 மாதங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை கையிருப்பு வைத்திருப்பதாக கூறும் விவசாயிகள், போராட்டக் களத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர்.