கெஜ்ரிவால் pt web
இந்தியா

“கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் தவறான முன்னுதாரணம்” - கோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் நேர்மையற்ற அரசியல்வாதிகள் குற்றம் செய்ய அனுமதிக்கும் வகையில் தவறான முன்னுதாரணமாகிவிடும் என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

PT WEB

செய்தியாளர் நிரஞ்சன் குமார்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவை பிறப்பிக்க உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை சார்பில், இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படை சட்ட உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ இல்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

போட்டியிடும் வேட்பாளராக இல்லையென்றாலும் பிரச்சாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இதுவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது இல்லை. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரச்சாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்கினால் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்” என அமலாக்கத்துறை பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

அமலாக்கத்துறை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும் பட்சத்தில் அனைத்து நேர்மையற்ற அரசியல்வாதிகளும் குற்றங்களை செய்ய வழிவகுக்கும், தேர்தல் காலம் என்ற போர்வையில் விசாரணையை தவிர்க்க சூழலை ஏற்படுத்தும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.