கொரோனா காரணமாக அதிகரித்து வரும் உயிரிழப்பால், பெங்களூரு நகரில் தகன மேடைகளில் சடலங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில், மாநகராட்சி நிர்வாகங்கள் செய்துள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து சற்றே விரிவாக பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் 3.66 லட்சம். இது முன்பைவிட குறைவுதான் என்றாலும், பாதிப்பின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் கவலைகொள்ள வைக்கிறது. இதன்காரணமாக, இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், பார்கள் இயங்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளன. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் காலை 10 மணிவரை திறந்திருக்க அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த வெளியாகியுள்ள சில தகவல்கள் கர்நாடகாவில் உள்ள நிலைமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. கர்நாடகாவில் சனிக்கிழமை 482 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 285 மரணங்கள் பெங்களூரில் மட்டும். ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் 281 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதுவே வெள்ளிக்கிழமை 346 என்ற எண்ணிக்கையை தொட்டது. கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்த இந்த 15 மாதங்களில் அதிக தினசரி எண்ணிக்கை இதுவாகும்.
அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்புகள் காரணமாக, கொரோனா சடலங்களை எரிக்க, பெங்களூரில் 7 தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள ஏழு தகன மேடைகளும் கடந்த மூன்று வாரங்களாக கிட்டத்தட்ட இந்த தகன மேடைகளில் சடலங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில் உள்ளன. இதனால் தகனங்களை மேற்கொள்ள பெங்களூரு நகரத்தின் புறநகர் பகுதிகளில் கிரானைட் குவாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை தற்போது கொரோனா இறப்புகளை எரிக்கும் தகன மேடைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பெங்களூருவின் புறப்பகுதியில் அமைந்திருக்கும் கெட்டனஹள்ளியில் உள்ள கிரானைட் குவாரியில் இரும்பு பைப்புகளை கொண்டு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் சில நாட்களாக கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இதேபோல் மற்றொரு புறநகர் பகுதியான தவரேகேரில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படாத புதைகுழி அடையாளம் காணப்பட்டு அவையும் தற்போது கொரோனா மரணங்களின் தகன மேடையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கெட்டனஹள்ளி மற்றும் தவரகேரே ஆகிய இரண்டும் பெங்களூருக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இதில் கெட்டனஹள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தகன மேடையில் தினமும் பெங்களூரிலிருந்து கொண்டுவரப்பட்டும் 30 முதல் 40 கொரோனாவால் இறப்போரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டு வருகின்றன. கெட்டனஹள்ளியில் தகன வசதியை பராமரிக்க அரசாங்கம் சில தொழிலாளர்களை பணியாளர்களாக நியமித்துள்ளது.
இங்கு சில தன்னார்வலர்கள் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் மாற்றப்பட்ட கிரானைட் குவாரியில் தகனங்களுக்குத் தேவையான பல அடிப்படை வசதிகள் இல்லை என்று பதினைந்து நாட்களுக்கு முன்பு கெட்டனஹள்ளி இறுதிசடங்குகளை செய்து வரும் தொழிலாளி ஒருவர் கூறியிருந்தார்.
"இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசாங்கம் குடிநீர் மற்றும் கழிப்பறைகளை வழங்கியிருந்தாலும், அவர்கள் காத்திருக்கும் வகையில் தங்குமிடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படவில்லை. இந்த தகன மேடையில் நியமனம் செய்யப்பட்டிருக்கும் பல தொழிலாளர்களுக்கு இந்த வேலையில் முன் அனுபவம் இல்லை. இதனால் ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அளவுக்கு சடலங்கள் குவிகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
கெட்டனஹள்ளி கிரானைட் குவாரி தகன மேடை தொடர்பாக அங்கு 10 நாட்களாக பணிபுரிந்த யெல்ஹானகாவைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், "இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். அதன்படி, கெட்டனஹள்ளி கிரானைட் குவாரி தகன மேடையில் வேலை செய்ய முடிவு செய்தேன். அரசாங்கம் பிபிஇ கருவிகளை வழங்கியது. ஆனால் உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை வழங்க முன்வரவில்லை. அதை அந்தப் பகுதியில் பெறுவது கடினமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார்.
இதேபோல், இந்த தகன மேடையில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியரான பிரசாந்த் என்பவர், "கடந்த சில நாட்களாக, பல சடலங்கள் இங்கு கொண்டுவரப்படுகின்றன. நாங்கள் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 11 மணிக்கும் மேலாக வேலை செய்கிறோம். தினமும் இங்கு சுமார் 25-30 உடல்களை தகனம் செய்கிறோம். பெங்களூரு நகர தகனங்களைப் போலவே, இங்கும் ஆம்புலன்சுகளும் வரிசையாக நிற்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
தகவல் உறுதுணை: The Indian Express