மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கல்யாண் நகர் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அதிகாலை நேரத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர், மதுபோதையில் அதிவேகமாக Porsche ரக காரை இயக்கி வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், காரின் முன் சென்ற இருசக்கர வாகனத்தில் பயணித்த ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் அனிஸ் துனியா, அஸ்வினி கோஸ்டா என்ற தம்பதியின் மீது அது மோதியுள்ளது. இந்தவிபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த அத்தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுவன் கைது செய்யப்பட்டான். இருந்தபோதிலும், ‘300 வார்த்தைகளில் சாலை விபத்தின் விளைவுகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கட்டுரை எழுத வேண்டும்’ என்றுகூறி, இதேபோன்ற இன்னும் ஒரு சில நிபந்தனைகளை அச்சிறுவனுக்கு விதிக்கப்பட்டு, கைதான 15 மணி நேரத்திலேயே அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இது நிதர்சனத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜாமீனும் ரத்து செய்யப்பட்டது. ஆகவே சிறுவன் மீண்டும் கைதாக சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் இது தொடர்பாக சிறுவனின் தந்தை, பார் உரிமையாளர், பார் ஊழியர்கள் ஆகிய மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, ‘என் மகன் காரை ஓட்டவில்லை. ஓட்டியது குடும்ப ஓட்டுநர்தான்’ என சிறுவனின் தந்தை தெரிவித்தார். அதன்பேரில் விசாரணைக்காக குடும்ப ஓட்டுநரும் சிறுவனின் தாத்தாவும் காவல்துறையால் அழைக்கப்பட்டனர். அப்போதுதான் மேலும் அதிர்ச்சிகர விஷயங்கள் அம்பலமானது.
அதன்படி குடும்ப ஓட்டுநர் போலீசாரிடத்தில் “காரை நான் ஓட்டவில்லை. என்னை மிரட்டி, பணம் கொடுத்து குற்றத்தை நான் செய்ததாக, சிறுவனின் தாத்தாவும் தந்தையும் ஒப்புக் கொள்ள வைத்தனர்” என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில், சிறுவனின் தாத்தா அகர்வால் நேற்று (25.5.2024) அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார், ”விபத்திற்கு பிறகு சிறுவனின் தந்தையும் தாத்தாவும் மே 19 - 20 வரை குடும்ப ஓட்டுநரை தங்களின் பங்களாவில் வைத்து, அவரின் செல்போனை எடுத்து வைத்துகொண்டு, காரை அவர்தான் ஓட்டினார் என ஒப்புக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதை ஓட்டுநர் வாக்குமூலமாக கொடுத்திருக்கிறார்” என்றுள்ளனர்.
இதனடிப்படையில், சிறுவனின் தாத்தா மற்றும் தந்தைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் மூன்றாவது முதல் தகவல் அறிக்கையாகும்.
மேலும், இவ்வழக்கை பொறுத்தவரை காவல் அதிகாரிகள் சிலர் சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ததாக ஆரம்பத்தில் இருந்தே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில்தான், எர்வாடா காவல்நிலைய ஆய்வாளர் ராகுல் ஜக்டேல், உதவி ஆய்வாளர் விஸ்வநாத் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல் கட்டுப்பாடு அறைக்கு சரியான நேரத்தில் தெரிவிக்க தவறிய குற்றத்துக்காக இவர்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.