இந்தியா

வெளியானது புதிய வரைபடம்: அண்டை நாடுகளுக்கு இந்தியா சொன்ன செய்தி!

வெளியானது புதிய வரைபடம்: அண்டை நாடுகளுக்கு இந்தியா சொன்ன செய்தி!

webteam

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் புதிதாக உருவாகியுள்ள நிலையில், இந்தியாவின் புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

370 வது சட்டப்பிரிவின் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து, காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதன்படி அக்டோபர் 31 ஆம் தேதி முதல் இரு யூனியன் பிரதேசங்களும் செயல்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில், இந்தியாவின் அதிகாரப்பூர்வ புதிய வரைபடத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகளும், மற்ற 7 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிரப்பு காஷ்மீரின் முசாஃபராபாத்தும், சீனா நிர்வகித்து வந்த அக்சாய் சின், கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் அண்டை நாடுகளுக்கு எல்லை குறித்த செய்தியை இந்தியா சொல்லாமல் சொல்லியுள்ளது.