இந்தியா

விமான பயணிகளுக்கு மீண்டும் உணவுகள் : மாஸ்க் இல்லையென்றால் பயணம் ரத்து

விமான பயணிகளுக்கு மீண்டும் உணவுகள் : மாஸ்க் இல்லையென்றால் பயணம் ரத்து

webteam

விமான பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அணியாத நபர்களின் பெயர் பயணிகள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சாப்பாடு வழங்கப்படாமல் இருந்தது. வெளிநாடுகளுக்கு விமானங்களில் பயணிப்பவர்களுக்கு மட்டும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தின்பண்டங்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், விமானப் பயணிகளுக்கு பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு புதிய உத்தரவுகளை விமான பொதுப்போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்தியாவிற்குள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பதப்படுத்தப்பட்ட சாப்பாடு, தின்பண்டங்கள், பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களில் சூடான சாப்பாடு மற்றும் அளவான பானங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் முகக்கவசம் அணியாத பயணிகளின் பெயரை பயணத்தின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்காக பயன்படுத்தும் தட்டுகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது எனப்பட்டுள்ளது. மேலும், உணவு வழங்கும் ஊழியர்கள் கைக்கவசம் அணியவேண்டும் எனவும், அதனை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.