கொரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் வாகன பர்மிட், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றிற்கான கால அவகாசத்தை நீட்டித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலானது. தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காரணமாகக் கடந்த பிப்ரவரி மாதம் முதல் முடிவடையும் நிலையில் உள்ள வாகன பர்மிட், ஓட்டுநர் உரிமம், வாகன எண் பெறுதல், வாகன ஓட்ட கற்றுக்கொண்டு இருப்பவர்களில் தற்காலிக உரிமம் ஆகியவற்றிற்குக் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், வாகன பர்மிட், ஓட்டுநர் உரிமம், வாகன எண் பெறுதல், வாகன ஓட்ட கற்றுக்கொண்டு இருப்பவர்களில் தற்காலிக உரிமம் ஆகியவற்றிற்குச் செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளுக்கு இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.