ஊழல் வழக்குகள் நிலுவையிலுள்ள 15 மூத்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது மத்திய அரசு.
மத்திய அரசு சுங்கத்துறையிலுள்ள மூத்த அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம், இந்த அதிகாரிகள் மீது ஊழல், லஞ்சம் தொடர்பான வழக்குகள் உள்ளதால் இவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டாய ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு மொத்த தொகையாக அவர்களுக்கு வழங்கப்பட்ட வந்த சம்பளம் மற்றும் சலுகைகள் மூன்று மாதங்களுக்கு கணக்கிடப்பட்டு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஆர்எஸ் அதிகாரிகள் பட்டியலில் அசோக் அகர்வால், எஸ்.கே ஸ்ரீவஸ்தவா, பி.பி.ராஜேந்திர பிரசாத், அஜோய் குமார் சிங், பி அருளப்பா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் 12 வருமானவரித் துறையின் மூத்த அதிகாரிகள் இதேபோன்ற ஊழல் புகார்களால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. பொதுநிதி விதிகளின் விதி 56 (ஜெ) யின்படி வருமானவரி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் வயது 50 முதல் 55 வரை உள்ளவர்கள் அல்லது 30 வருடம் பணி முடித்த அதிகாரிகள் ஆகியவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கலாம். இந்த விதிகளின்படி 15 அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றில் ஈடுபடும் அதிகாரிக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.