manipur twitter
இந்தியா

மணிப்பூரில் தொடரும் வன்முறை: பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு.. துணை ராணுவம் குவிப்பு!

Prakash J

மணிப்பூரில் தொடரும் வன்முறை

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் வெடித்த வன்முறை

மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன்வந்திருக்கிறது. இந்தச் சூழலில், பிஜாம் ஹேமன்ஜித் மற்றும் ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி ஆகிய இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகின. இதனிடையே மாணவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பள்ளிகளை மூட அரசு உத்தரவு: இணையச் சேவை மீண்டும் முடக்கம்!

தலைநகர் இம்பால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கண்டன பேரணிகளை நடத்தினர். அப்போது பல இடங்களில் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி எறிந்தனர். ஒரு சில இடங்களில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 29ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் விதமாக மணிப்பூர் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு இணையச் சேவை துண்டிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலம் பதற்றம் நிறைந்த பகுதியாக அறிவிப்பு

தற்போதைய நிலவரப்படி மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு அதிகாரம் அனைத்தும் உச்சவரம்பில் இருக்கும் எனவும், 19 காவல் எல்லைகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் பதற்றம் நிறைந்த பகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு துணை ராணுவப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த அறிவிப்பு வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் அண்டை மாநிலங்களுக்கும் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.