இந்தியா

ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை?

ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு பரிந்துரை?

Rasus

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு- காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா திரும்பப் பெற்றதால், முதலமைச்சர் பதவியில் இருந்து மெஹபூபா முஃப்தி ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமாக 87 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 44 இடங்கள் தேவை. ஆனால் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவை பெற்றால் மட்டுமே மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியமைக்க முடியும். ஆனால் ஜம்மு- காஷ்மீரில் எந்தக் காரணம் கொண்டும் ஆட்சி அமைக்கப் போவதில்லை என தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார். தன்னிடம் போதுமான இடங்கள் இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க எந்த வாய்ப்பும் இல்லை என்றும் அவர் கூறினார். அதேபோல ஜம்மு- காஷ்மீரில் 2வது பெரிய கட்சியான பாஜக ஆளுநர் ஆட்சியே சரி என்று சொல்லி விட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்திடம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முயலுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, பிடிபி கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் கேள்விக்கு இடமே இல்லை என்றும் பிடிபியுடன் சேர்ந்து எப்படி ஆட்சி அமைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வரும். இதனிடையே இன்று இரவுக்குள் ஆளுநர் ஆட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

காஷ்மீர் சட்டசபை நிலவரம்:-

மொத்தம் - 87 இடங்கள்
பிடிபி    - 28
பாஜக    - 25
தேசிய மாநாட்டு கட்சி  - 15
காங்கிரஸ்- 12
மற்றவை - 7