இந்தியா

பாலியல் புகாரில் தென் மாநில ஆளுநர்களில் ஒருவர் ?

பாலியல் புகாரில் தென் மாநில ஆளுநர்களில் ஒருவர் ?

webteam

தென் மாநில ஆளுநர்களில் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்றின் ஆளுநர் மீது மத்திய விசாரணைக் குழு பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டின் படி, ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் பணிபுரியும் பெண்களுக்கு, ஆளுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விசாரணை மத்திய ரகசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனப்படுகிறது. அத்துடன் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அது பாஜக மற்றும் மத்திய அரசுக்கு பின்னடைவாக அமையும் என கருதப்படுவதால், அதற்கு அந்த ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் குற்றச்சாட்டு தொடர்பாக ஏதேனும் சிடி அல்லது எம்எம்எஸ் ஆதாரங்கள் உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மேகாலயா மாநிலத்தின் ஆளுநர் சண்முகநாதன் மீது, ராஜ் பவனில் பணிபுரிந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி. திவாரி, ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராக இருந்தபோது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தென் மாநில ஆளுநர்களில் ஒருவர் மீது பாலியல் குற்றசாட்டு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.