இந்தியா

பக்ரீத் பண்டிகை: காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு

பக்ரீத் பண்டிகை: காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு

webteam

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆய்வு மேற்கொண்டார்.

‌ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்வதற்கு‌ முன்பாகவே, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக அம்மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்‌கப்பட்டது. மேலும், பத‌ற்றமான பகுதிகளில் இரவு நேரங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் திங்க‌ள்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடவிருப்பதால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு‌ பரிசீலித்து வருகிறது. 

இதையொட்டி தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் ஆய்வு நடத்தினார். பக்ரீத் பண்டிகையை கொண்டாடவும், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி ஆளுநர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பண்டிகையை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கால்நடைகளை வாங்குவதற்காக காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் சந்தைகளை அமைக்கும்படியும் ஆளுநர் அ‌றிவுறுத்தியுள்ளார்.