இந்தியா

அரசு ஊழியர்களின் அலுவலக பயணம்...கடும் கெடுபிடி போட்ட மத்திய அரசு

அரசு ஊழியர்களின் அலுவலக பயணம்...கடும் கெடுபிடி போட்ட மத்திய அரசு

ச. முத்துகிருஷ்ணன்

மத்திய அரசு ஊழியர்கள் அலுவல் ரீதியான பயணங்களுக்கு குறைந்த கட்டண விமான சேவைகளை தேர்வு செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பயண நாளுக்கு குறைந்தது 3 வாரத்திற்கு முன்பே பயணச்சீட்டு வாங்கி செலவை குறைக்க உதவுமாறும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை குறைக்கும் நடவடிக்கைளில் ஒரு பகுதியாக இந்த சுற்றறிக்கையை நிதியமைச்சகம் அனுப்பியுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, சில பொருட்களுக்கான சுங்க வரி குறைப்பு, உர மானியங்கள் மற்றும் இலவச உணவு திட்டம் ஆகியவற்றின் காரணமாக நிதிச் செலவுகள் ஏற்கெனவே அதிகமாக இருப்பதால், வீணான செலவினங்களை அகற்றுவதை நிதி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தற்போது பால்மர் லாரி & கோ, அசோக் டிராவல் & டூர்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய மூன்று அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடமிருந்து மட்டுமே விமான டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்றும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.